Tuesday, October 5, 2010

சமூகம் எனக்கு விரோதி



நினைத்துக்கூட பார்க்கவில்லை
இப்படியும் நான் நினைப்பேன் என

நானும் மதித்து இருந்தேன் தேசத்தை
நாளுக்கு நாள் நடப்பதெல்லாம் 
நன்மைக்கே என நம்பிக்கை 
எனக்கும் இருந்தது ஒரு நாளில் 

நான்கு மடங்கு பெருகிவிட்ட மக்கள் 
நாடெங்கும் குவிந்திருக்கும் வளம் 
ஊரெங்கும் ஓங்கி நிற்கும் ஒற்றுமை 
என்றெல்லாம் புகழ்ச்சிப் புலம்பல்கள் 
என் சிந்தனையையும் சிறைத்திருந்தது

நாட்கள் செல்லச் செல்ல 
நடப்பதை கவனிக்க மறுக்க முடியாமல் 
இந்நாட்களுக்கு முன் 
நடந்ததையெல்லாம் நடந்து பார்க்க 
நினைத்தது தவறு தான் 

வரலாற்றின் வழிகளில் 
வழிதவரித்தான் சென்றிருந்தேன் 

வரையறுக்கப்பட்ட வரலாறல்ல 
பள்ளி புத்தகங்களில் பதிக்கப்படாத 
மக்களிடம் மறைக்கப்பட்ட வரலாறு 

யாருக்கெல்லாம் தெரிந்திருந்ததோ 
மறைக்க என்னவெல்லாம் காரணமோ 
தெளிவாய் வரைந்த கோடுகளுக்கிடையில்
துல்லிய இடைவெளிகளை 
தெரிந்தே தான் அறுத்தார்களோ 

வெறுப்புக்கு விதை போடும் வரலாறு 
நம் மூதாதையரின் மூடத்தனம் 
அவர்கள் ரத்தத்தில் ஓடிய ரத்தவெறி 
அந்நாளின் ஆட்சி மகுட அறியாமை 

அணுக்களில் பிரயாணித்த அறியாமையுடன் 
கரு தரித்த கணம் 
துடிக்க வைத்த ரத்தத்தின் வெறியால் 
நாம் பிறப்பால் மூடர்கள்
நாம் பிறப்பால் வெறியர்கள் 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் 
அடியடியாய் வைத்து வந்த நாகரீகம் 
சமூகக் கோடுகள் சேர்ந்து நிற்க 
குறுநிலம் மாநிலமாகியும் 
ஒரு நிலமாய் ஒரு நாளும் இருந்ததில்லை 

இமயத்தின் மேல்பக்கமிருந்து 
ஊடுருவி  உள் நுழைந்து 
அன்று ஆக்ரமித்த ஆரியன் தான் 
இன்றும் ஆட்சி செய்கிறான் 

ஒரு பக்கம் கடலழிக்க
மறுபக்கம் ஆரியனடிக்க 
தமக்குள்ளும் வேற்றுமை தெறிக்க 
சிதரித்திரிந்தான் திராவிடன் 
அன்றே ஆரம்பிதத்திது 
திராவிடனின் விருந்தோம்பலே அவனுக்கு வினை 

ஆணவத்தால் முப்பதுக்கு மேல் பிரிந்த திராவிடன் 
அவன் முன்னோர் வகுத்ததில் 
பலவற்றை கழித்து பலதினை கூட்டி 
தவறாகக் கணித்தான் பெருகப் பெருக 


ஆக்கிரமிப்பு நிலத்தில் மட்டுமல்ல 
மதத்திலும் கூட 

ஒரே சிந்தனை பல வடிவங்களில் 
ஓர் இறை நம்பிக்கை 
வெவ்வேறு சமூகத்தில் 
வெவ்வேறு பெயர் 

ஒன்றாகக முயற்சியும் 
ஆளுமைக்கு மட்டுமே 
ஒன்றாக்க அன்று பிறந்தது 
பல உருவச் சிலைகள் 
புரிந்திராத இறைவனுக்கு 
பல கல் இணைகள் 

மூடத்தனம் முதி இருந்த நாட்கள் 
பல கதைகள் பதிக்கப்பட்டு
நிஜம் பலவும் அழிக்கப்பட்டு 
அடைத்திருந்த வழியை 
தூசி தட்டி திறக்க வந்த 
பலரில் ஒருவனே புத்தன் 
சிலை ஒழிக்க வந்து 
சிலயானவரில் அவனும் ஒருவன் 

இவ்வளவும் நடந்திருக்க 
நிலம் ஆனால் ஒன்றாகவில்லை

நிரந்தரமாய் இன்னிலையில் 
வடக்கும் தெற்கும் 
கோடிட்டு பிரிந்திருக்க 
குப்தனும் முகலாயனும் 
சோழனும் பாண்டியனுமாய் 
பெரிதும் சிறிதுமாய் 
நூறாய் மேலாய் பிளந்திருந்தது நிலம்

ஆங்கிலேயன் அடி இல்லாமல் போயிருந்தால் 
அருவதாய் அதற்கு மேலாய்
பிறிந்திருக்கும் இந்த நாடு 

அவன் தான் வரைந்தான் கோடுகளை 
மாறாக நடந்திருந்தால் 
மொழிக்கிரண்டு நாடுகளாய்
கோட்டுக்குள் மதத்தாலும் 
கோட்டினை நீட்டவும் 
சண்டையிட்டு சண்டையிட்டு 
சீனர்களிடம் சிக்கி சிதந்திருப்போம்

இருந்தும் பொய்யாய் புகழ் பாடி 
இல்லாத வரலாற்றை 
இயற்றிய அந்த சிலர் 
இல்லாமல் போயிருந்தால் 
இன்று நாம் 
இல்லாமலே போயிருப்போம் 

இருந்தும் இந்நாள் வரை 
வெறுப்பதே விருப்பமாய் 
அறியாமையில் அடித்துக்கொண்டே அழிவதுதான் 
பொழுது போக்க நாம் முயல்வது 

தான் நினைப்பதே நிஜம் என்று 
எதிர்ப்பவனை வெட்டித் தீர்க்க 
நினைக்காதவன் இந்த நாட்டில் எவனுமில்லை 

அதிர்ச்சி ஒன்றும் இல்லை இதை உணர்ந்ததில் 
கேவலம் நாம் பிறப்பால் வெறியர்கள் 

இந்த வெறிக்கும்பலில் 
சேர்ந்திருக்க ஆசையில்லை எனக்கு 
தனி மரமாய் தளர்ந்து விழுவதே மேல் 
தோப்பாய் எரிந்து மடிவதற்கு 

கேட்கிறது உங்கள் ஆணவக் குறள்
வெளியேற்றக் கத்துவது 

நான் நிஜமனைத்தும் சொல்லியிருந்தால் 
நிலம் அதிர்ந்திருக்கும் 
சொல்லியது சிலதே ஆனால் 
கதையென்று ஒன்றுமில்லை 
பதில் சொல்ல பயமும் இல்லை 
பதில் சொல்லிப் பயனும் இல்லை 
பதில் எதையும் மாற்றவும் போவதில்லை 
அதற்கு உங்களுக்கு தகுதியும் இல்லை

வெளியேறவும் மாட்டேன் 
நிலமென்றும் எவனுக்கும் சொந்தமில்லை 
இன்று நீங்கள் இங்கு 
நாளை எவனோ 

இங்குதான் பிறந்தேன் 
நிலத்திற்கு நான் சொந்தம் 
வேண்டுமென்றால் கொன்று விடுங்கள் 
அதுவொன்றும் புதிதில்லையே உங்களுக்கு 

ஆம் நான் சமூக விரோதிதான் 
உங்களின் இந்த விளங்காத 
சமூகத்தில் சேர விரும்பாத 
தனி ஒருவன் நான்